Friday, December 21, 2012

திண்டுக்கல் கோட்டை. . .



திண்டுக்கல் பூட்டுக்கு மட்டும் பெயர் பெற்றது கிடையாது திண்டுக்கல் கோட்டைக்கும் தான் புகழ் பெற்றது இப்போது இந்த கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1755 இல் ஹைதர் அலி தன் காதல் மனைவி பகருன்னிசாவையும் ஐந்து வயது மகன் திப்புவையும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் இங்குதான் மறைத்து வைத்தார். பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுவர். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.
இந்தக் கோட்டை தலையனைத் திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது. இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோவில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோவிலுக்கு செல்ல படிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் நடந்த மன்னர்களின் படையெடுப்பால் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது அபிராமி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சிதருகின்றன. இந்தக் கோட்டையில் இருந்த வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன, இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாத்திற்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.

திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு இந்தக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கோட்டையின் மதில்களை சீரமைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில் 1790 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயப் படைகளின் கைகளில் வந்தது.

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான். இது 1799 ஆம் ஆண்டு முதல் 1947 வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவீரன் பூலித்தேவன் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பிக்க இந்தக் கோட்டைக்குள் சென்றார். அதன்பிறகு பூலித்தேவனை யாரும் பார்க்கவில்லை என்றும் ஒரு வரலாறு உள்ளது. வரலாறைப் போலவே கோட்டையும் மிகவும் வசீகரமானது. யாவரும் காணலாம்.
இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கும். ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. நீங்களாவது ஏறத் தயராகுங்கள்.

சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்!

சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்!

அந்த காலத்திலிருந்து நம் பழக்கத்தில் உள்ள சில சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும் அதற்கான காரணிகளும்: பழக்க வழக்கம் என்ற பெயரில் காரணம் தெரியாமலேயே இன்றும் பல பழங்கங்கள நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கு நான் படித்த ஒரு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு முனிவர் தம் சீடர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தார், அப்பொழுது ஆசிரமத்தில் வளரும் பூனை ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது. அதனால் சீடர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக முனிவர் அந்த பூனையை வகுப்பறைக்கு அருகில் உள்ள தூணில் பிடித்து கட்ட சொன்னார். அவர் ஒவ்வொரு முறை வகுப்பு எடுப்பதற்கு முன்பும் பூனை தூணில் கட்டப்பட்டது. முனிவர் வயதாகி இறந்தவுடன் வேறொரு முனிவர் சீடர்களுக்கு வகுப்பு எடுக்கலானார், முன்புபோலவே வகுப்பு எடுப்பதற்கும் முன் பூனை தூணில் கட்டப்பட்டது சில காலத்திற்கு பிறகு பூனை இறந்துவிட்டது. வகுப்பு எடுக்க வந்த முனிவர் தூணில் பூனை கட்டப்படாததை கண்டு சீடர்களை அழைத்து நான் வகுப்பு எடுக்கும் முன் தூணில் பூனை கட்ட வேண்டும் என்று தெரியாதா என்று ஆத்திரப்பட்டார். பின்பு பூனை ஒன்று புதிதாக வாங்கப்பட்டு தூனில் கட்டியபிறகே வகுப்பு எடுக்கலானார்.

இன்று நம் சாஸ்திர சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும் இந்த அளவில்தான் உள்ளன. இதுதான் பழக்கம் என்று கண்மூடித்தனமாக செய்வதை தவிர்த்து ஏன் என்று கேட்போமா...

கல்லணையை கட்டியது எப்படி?

கல்லணையை கட்டியது எப்படி?

*கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி*

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான்.

ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் .

அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று . உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை..